சென்னை:தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட தென் அமெரிக்கா வனப்பகுதிகளில் வசிக்கும் மர்மோசெட் (Marmoset Monkey) என்ற 4 அரிய வகை குரங்குகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமியை கைது செய்து, பின்னர் அவருடைய செலவிலேயே இந்த 4 அரிய வகை குரங்குகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் 2 பிங்க் கலர் பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்துள்ளார். அதைப் பார்த்த சுங்க அதிகாரிகள் அந்த பயணியின் மீது சந்தேகப்பட்டு நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து அவர் பேசியதில் சந்தேகப்பட்டு அவர் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த கூடைகளில் வெளிநாட்டு குரங்குகள் 4 இருந்ததை பார்த்து சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த பயணி தப்பிகாமல் இருக்க ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அதோடு அந்த குரங்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் உடனடியாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த குரங்கு குட்டிகள் மர்மோசெட் வகையைச் சேர்ந்தவைகள் என்றும், இந்த ரக குரங்குகள் அதிகமாக தென் அமெரிக்காவில் வனப்பகுதிகளில் வசிப்பவைகள் என்று தெரியவந்தது. மேலும் இந்த குரங்குகள் உரிய மருத்துவ பரிசோதனை அனுமதி சான்றிதழ் பெறாமல் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆகையால் இந்தக் குரங்குகள் மூலம் வெளிநாட்டு நோய் கிருமிகள் நம் நாட்டில் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளது. எனவே இந்த குரங்குகளுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை. ஆகையால் இந்த 4 குரங்குகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு, எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில் திருப்பி அனுப்ப வேண்டும். கடத்தல் ஆசாமியைக் கைது செய்து இதற்காக செலவாகும் தொகையை அவரிடம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் அரிய வகை குரங்குகளை கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லும் ஏர் ஏசியா விமானத்தின் மூலம் இந்த குரங்குகளை தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். இதேபோன்று தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் அரியவகை விலங்குகளை கடத்தி வருவதை தடுப்பதற்காக ஆலோசனைகள் மேற்கொண்ட நிலையிலும், தொடர்ந்து இது போன்ற சட்டவிரோதமாக விலங்குகளை சென்னைக்கு கடத்தி வருவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. ஆகையால் சென்னை விமான நிலையத்தில் விலங்குகள் கடத்தலை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா; 15 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்