சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் விசாவில், துபாய்க்கு போய்விட்டு திரும்பி வந்தனர். சுங்க அதிகாரிகளுக்கு அந்த 2 பயணிகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முரணாக, சந்தேகப்படும் விதத்தில் பதி அளித்ததையடுத்து சுங்க அதிகாரிகள் அவர்கள் உடமைகளை முழுமையாக சோதனை இட்டனர்.
அப்போது அவர்களுடைய கைப்பைகளில் மறைத்து வைத்திருந்த 20 ஐபோன்களை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த் ஐபோன்களின் சர்வதேச மதிப்பு ரூபாய் 17.5 லட்சம் ஆகும். இதை அடுத்து 2 பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்ல முயன்றனர்.
ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் இன்னும் தீரவில்லை. இதை அடுத்து 2 பயணிகளையும் மீண்டும், தனி அறைக்கு அழைத்து சென்று அவர்கள் ஆடைகளை களைந்து சோதனை இட்டனர். அப்போது அவர்கள் இருவரும் அணிந்திருந்த ஷூ சாக்ஸ்களில் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களில் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். இருவரின் ஷூ சாக்ஸுகளில் இருந்து சுமார் 2 கிலோ தங்கப்பசையை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் பயணிகள் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் துபாயில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மற்றொரு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர் முழங்காலில் பெரிய பேண்ட்டைட் கட்டுப்போடப்ட்டு இருந்தது குறித்து அதிகாரிகள் கேட்டபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போட்டு, வலியுடன் நடந்து வருவதாக கூறினார். ஆனால் அதற்கான மருத்துவ சான்றிதழ் எதுவும் அந்தப் பயணியிடம் இல்லை. எனவே சுங்க அதிகாரிகள் அவர் முழங்காலில் போடப்பட்டிருந்த பேண்டைட் கட்டை பிரித்துப் பார்த்தனர்.
அப்போது அவரது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் கட்டுக்குள் ஒரு பிளாஸ்டிக் பவுச் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பவுச்சுக்குள் ஒன்றே கால் கிலோ தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து, நூதனமான முறையில் தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்ததோடு, தங்கப் பசையையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள கழிவறையை, விமான நிலைய ஊழியர்கள் சுத்தப்படுத்தும் போது, அதன் தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் ஒன்று இருந்தது. அதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள், சுங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை எடுத்துப் பிரித்துப் பார்த்த போது அதனுள் 917 கிராம் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பார்சலையும் பறிமுதல் செய்து, அது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து நடந்த சோதனைகளில், 2 விமானங்களில் வந்த 3 பயணிகளிடம் இருந்தும், விமான நிலைய கழிவறையில் இருந்தும் ரூ.2.35 கோடி மதிப்புடைய 4.167 கிலோ தங்க பசை, மற்றும் 20 ஐ போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தி வந்த பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 6 சிறார்கள் தப்பியோட்டம்!