சென்னை:சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்ற அப்பு. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சொத்து தகராறு வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜசேகர் என்ற அப்புவை நேற்று இரவு (ஜூன் 11) கொடுங்கையூர் போலீசார் திருவள்ளூரில் வைத்து கைது செய்து கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜசேகர் அழைத்து வரும்போதே உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்துள்ளார். இதனால் போலீசார் இன்று (ஜூன்12) மதியம் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜசேகர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜசேகர் மரணம் தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டம் 176 சட்டப்பிரிவு கீழ் உயர்காவல்துறை அலுவலர்கள் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டு உயிரிழந்த ராஜசேகரின் உடலை அவர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்ய உயர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராஜசேகர் மீதுள்ள வழக்குகள் மேலும் காவல் துறை உயரலுவலர்கள் துறை ரீதியான விசாரணையும், புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் குழு அமைக்கப்பட்டு கொடுங்கையூர் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தவும் உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட நபர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில்தான் சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்பவர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். விசாரணையில் காவல்துறையினர் தாக்கியதால்தான் விக்னேஷ் உயிரிழந்ததாக தெரியவந்ததால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மற்றொரு சம்பவம் சென்னையில் நடந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விசாரணை கைதி விக்னேஷ் மரணம்; மேலும் 4 போலீசார் சிறையில் அடைப்பு