சென்னை: சீன நாட்டினர் 250 க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு விசா வழங்கி முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன், தனியார் நிறுவன நிர்வாகி விகாஸ், மும்பையைச் சேர்ந்த பெல் நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆடிட்டரான பாஸ்கரராமனை சிபிஐ அலுவலர்கள் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 17 ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய ஒன்பது இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
லண்டனில் இருந்து வந்த சாவி.. கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ சோதனை! அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கம் பைக்கிராப்ட் சாலையில் உள்ள சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான வீட்டிலும் சிபிஐ சோதனை நடைபெற்றது. ஆனால், அப்போது வீட்டில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதிக்கு சொந்தமான பீரோவுக்கு சாவி இல்லாததால், அதை திறக்க முடியாமல் அந்த பீரோவுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றனர்.
தற்போது லண்டனில் உள்ள கார்த்தி சிதம்பரத்திடம் சாவியைப் பெற்று, பீரோவைத் திறந்து சிபிஐ இன்று (ஜூலை 9) சோதனை நடத்தி வருகிறது. மதியம் 2.20 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனையில், ஏழு சிபிஐ அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையில் கிடைக்கப்பெறும் ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ அலுவலர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:‘லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன்’ - புகழேந்தி