தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகா சிவராத்திரி விழாவில் முதன்முறையாக கலைநிகழ்ச்சிகள் - அமைச்சர் சேகர்பாபு - Cultural programs on Maha shivaratri day in Kapaleeswarar Temple says Minister Sekar Babu

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மகா சிவராத்திரி நாளன்று மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

மகா சிவராத்திரி விழா
மகா சிவராத்திரி விழா

By

Published : Feb 24, 2022, 5:18 PM IST

சென்னை:இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன்முறையாக மகா சிவராத்திரி விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இன்று (பிப்.24) சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி நாளன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதையொட்டி அங்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொற்காலம் எனப் போற்றும் வகையில் திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்

கோயில் நிலங்கள் மீட்பு, திருப்பணிகள், குடமுழுக்கு, அறநிலையத்துறை சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், கோயில் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு எனப் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிவபெருமானை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில் அறநிலையத்துறை வரலாற்றில் முதல்முறையாக மகா சிவராத்திரி அன்று கபாலீசுவரர் கோயிலில் 100-க்கும் மேற்பட்ட ஆன்மிக கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2ஆம் தேதி காலை 6 மணி வரை, தொடர்ந்து 12 மணி நேர மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

மகா சிவராத்திரி அன்று ஆன்மிகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்திப் பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளன. ஆன்மிகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களின் பிரசாதங்கள் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மகா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்திக் கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி அரங்கில் 3 ஆயிரம் நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு கால் பாய்ச்சலில் இந்து சமய அறநிலையத்துறை

பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து சிவாலயங்களிலும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்த திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சிவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

முதலமைச்சர் ஸ்டாலின் திருக்கோயில் திருத்தேர் மற்றும் குளங்களைச் சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் குளங்கள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய குளங்கள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்படவுள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகம் சீர்கெட்டு இருந்த நிலையில் அதைச் சரி செய்ய சில காலம் தேவைப்படும்.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட கோயில் நிலங்களை அரசுத்துறை மற்றும் அறம் சார்ந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவோம். இதுவரை ரூ. 2042 கோடி மதிப்புள்ள கட்டடங்கள், நிலங்கள், குளங்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை என்ற அடையாள கற்கள் பதிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு வருகின்றன.

எட்டு கால் பாய்ச்சலில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களது கவனத்திற்கு வருவதையும், வராததையும் கவனித்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: நாகூர் தர்கா தற்காலிக நிர்வாக குழுவை ஏன் கலைக்கக் கூடாது ? - நீதிமன்றம் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details