சென்னை : விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு லாபகரமாக விலை கிடைப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் வரத்து அதிகமிருப்பதால், அப்போது ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
இத்தருணங்களில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல், உளுந்து, பாசிப்பயறு மற்றும் கொப்பரை போன்ற விளைபொருட்களை ஒன்றிய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, விவசாயிகளின் நலனை பாதுகாத்து வருகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை
தமிழ்நாட்டில் துவரைப் பயிரானது கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தேனி, ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கடந்த ஜுன் மாதத்தில் விதைப்புப் பணி தொடங்கி தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது.
துவரைப் பயறுக்கு வெளிச்சந்தை விலையானது, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறையும்பட்சத்தில், விலை வீழ்ச்சியிலிருந்து துவரை விவசாயிகளை பாதுகாத்திட குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை கொள்முதல் செய்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பிரதான கொள்முதல் நிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. நாஃபெட் நிறுவனம் ஒன்றிய கொள்முதல் முகமையாகவும் செயல்படுகின்றது.