சென்னை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட 12 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.
இந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 8ஆம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. மும்பையில் நடந்த இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை(ஏப்.12) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று மும்பையில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த தோனி, சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை, பழவந்தாங்கல் மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார்.