தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துவருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகளவில் உள்ளதால் மாநில அரசு, இன்று இரவு 12 மணி முதல் ஜூன் 30ஆம் தேதிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கே மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், மேற்கொண்ட மாவட்டங்களில் மதுபானக் கடைகள் மூடப்படும் அச்சத்தால் மதுக்கடைகளுக்கு முன்பு மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். மேலும், சரக்குகளை அதிகளவில் வாங்கி பைகளில் அடைத்து வருகின்றனர். இச்சமயத்தை பயன்படுத்தி மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாகவும், மதுப்பிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.