சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி மட்டும் அங்கு வசித்து வருகின்றார். இவரது வீட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் அவர் குடும்பத்துடன் வாடகைக்கு தங்கியிருக்கிறார்.
தற்போது ஊரடங்கு காரணமாக சோமசுந்தரத்தின் மனைவி, சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கும், ராமகிருஷ்ணன் குடும்பத்துடன் சொந்த ஊரான சின்ன சேலத்திற்கும் சென்றுள்ளனர். நேற்று இரவு சோமசுந்தரத்தின் மனைவி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இரு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இரு வீட்டிலும் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், வரதராஜபுரம் பகுதியை அடுத்த ஸ்ரீராம்நகரில் ராமமூர்த்தி (70) என்பவர் ஊரடங்கு காரணமாக, தனது மனைவியுடன் அருகில் உள்ள மகன் வீட்டில் தங்கி உள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். மேலும் ராமமூர்த்தி வீடு திரும்பிய பிறகே கொள்ளைப் போன பொருள்கள் குறித்து தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.