சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெருமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்கு உள்ளாகினர். தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் கனமழை காரணமாக பெருங்களத்தூர் நெடுங்குன்றம் சாலையில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் அந்த முதலை சாதுவான முதலை எனவும் மக்களை பார்த்தால் அந்த முதலை பயப்படக்கூடிய வகையை சார்ந்தது எனவும் விளக்கம் அளித்திருந்தனர்.
மேலும், அந்த முதலையை பிடிப்பதற்கு தீவிரமாக வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சதானந்தபுரம் ,ஆலப்பபாக்கம் ஜி கே எம் கல்லூரி செல்லும் சாலையில் பெரிய முதலை ஒன்று சாலையோரம் இருந்ததை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சுற்றுச்சுவர் அருகே முதலை படுத்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. பின், உடனடியாக தாம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தாம்பரம் பீர்க்கன்கரணை காவலர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.