புதுக்கோட்டை:தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, புகையிலைப்பொருட்கள், புதுக்கோட்டையில் அதிக அளவு புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பெயரில் தனிப்படை காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் காவல் எல்லைக்குட்பட்ட மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் கருப்பையா மகன் சின்னதுரை (வயது 52) மற்றும் துரைசாமி மகன் முருகப்பன் (வயது 50) ஆகிய இருவரும், காரையூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் காவல் துறையினர் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட மேற்கண்ட புகையிலைப்பொருள்கள் ரூ.58 ஆயிரம் மதிப்புடைய 77 கிலோவை கைபற்றினர். மேலும் அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றம் முன் நிறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சின்னதுரைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சின்னதுரையை புதுக்கோட்டை மாவட்ட சிறைத்துறை அலுவலர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றதாகவும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.