ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் ஆடவுள்ளது.
இதற்கான இந்திய அணி சென்ற மாதம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காயம் காரணமாக சில வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்திக்கு தோளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான யார்க்கர்களை வீசி எதிரணியை திக்குமுக்காட செய்த நடராஜனை உலகின் தலைசிறந்த பவுலர்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், இவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், நடராஜனக்கு பாராட்டு மழை குவிந்துவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் நடராஜனை மண்ணின் மைந்தர் என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார்.