உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா ஆகியோரின் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்க முடியாத சாதிவெறி சக்திகள் சங்கரை கொலை செய்தனர். 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரில் சங்கர் கொடூரமான முறையில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற கௌசல்யாவையும் கொலையாளிகள் வெட்டி வீழ்த்தினார்கள். மிகத்தீவிரமான சிகிச்சைக்கு பிறகே கௌசல்யா உயிர் பிழைத்தார். தமிழ்நாடு மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சி அடைந்த மிகக் கொடூரமான சாதி ஆணவப்படுகொலை இது.
இவ்வழக்கில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும் கூலிப்படையினர் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல்(எ) மதன் உள்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூன்று பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதன் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உய ர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் கீழமை நீதிமன்றத்தில் மூன்று பேர் விடுவிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மீதமுள்ள ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள்தண்டனை விதிக்க தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை என்பது ஏற்கும்படியாக இருந்தாலும்கூட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.