தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'துப்பாக்கி சூடு நினைவு நாளை கண்டன நாளாக அனுசரியுங்க..!' - சிபிஎம் - CPM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொடூரச் சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசை கண்டித்து, பொதுமக்கள் நாளை கண்டன நாளாக அனுசரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நாளை கண்டன - மார்க்சிஸ்ட் அறிவிப்பு!

By

Published : May 21, 2019, 11:23 PM IST

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மக்களுடைய வாழ்வாதார பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்திய பொதுமக்கள், கடந்த ஆண்டு மே 22ஆம் தேதியன்று இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அமைதியான முறையில் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல் துறையினர் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர். தலை, நெற்றி, மார்பு, கழுத்து என குறிவைத்து காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி மொத்தம் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்தனர்.

தமிழக காவல் துறையின் கொலைவெறித் தாக்குதலால் மரணமடைந்த 15 பேரின் குடும்பத்தாருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூரச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த போதிலும், மக்கள் மனதிலிருந்தும், உயிரிழந்த, ஊனமடைந்த குடும்பங்களின் மனதிலும் இச்சம்பவம் ஆறாத ரணமாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓராண்டு முடிவடைந்தும் இதுவரை நீதி கிடைக்காததும் மிகுந்த வேதனையாக உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படுகொலையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது எந்தவித விசாரணையோ, நடவடிக்கையையோ இதுவரை எடுக்காமல் மக்கள் விரோத அரசாக எடப்பாடி அரசு திகழ்ந்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு முனைந்து வருகிறது. வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகவும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடி வருகிறது.

சுற்றுச் சூழலையும், மக்களின் உயிர், வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கிட வேண்டுமென்றும், உயிரிழந்த 15 பேருக்கும் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இக்கோரிக்கைகளுக்காக போராடும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில்தெரிவித்துக் கொள்கிறது.

துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசை கண்டித்தும் நாளை கண்டன குரல் எழுப்ப வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details