தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் மறுப்பு" - ஆளுநருக்கு கண்டனம்! - என் சங்கரய்யா

விடுதலை வீரரான என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவரது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் மறுப்பு விவகாரம்
என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் மறுப்பு விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:36 PM IST

சென்னை:தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, "தமிழ்நாட்டின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

படிப்பை தொடர்வதா, விடுதலைப் போராட்டத்தில் சிறைக்கு செல்வதா என்ற கேள்வி எழுந்தபோது விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்வதையே தேர்வு செய்தார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் அவர், பல்கலைக்கழக தேர்வு எழுதுகிற வாய்பையும் இழந்து, படிப்பையும் கைவிட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இன்றுவரை என்.சங்கரய்யா விடுதலைப் போராட்டக் களத்திலும், அரசியல் களத்திலும் மக்கள் நலனை முன்னிறுத்தி போராடி வரும் ஆளுமையாவார். அவரின் மகத்தான தியாக வரலாற்றை இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளரான சாய்நாத் அவரது 'விடுதலைப் போராட்டத்தின் களப் போராளிகள்' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

விடுதலைக்காகவே தன் படிப்பையும், பட்டம் பெறும் வாய்ப்பையும் இழந்த என்.சங்கரய்யாவுக்கு, அதே மதுரை பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை எழுப்பியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என உடனடியாக அறிவித்தார். அதன் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிண்டிகேட் மற்றும் செனட்டில் தீர்மானம் நிறைவேற்றி நவம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், என்.சங்கரய்யாவுக்கு பட்டமளிக்கும் சான்றிதழில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். ஆளுநரின் மறுப்பை உயர்கல்வித்துறை அமைச்சரின் செய்திக் குறிப்பும் உறுதி செய்துள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு கொடுத்துவரும் சிறப்பு ஓய்வூதியம், பட்டயங்கள், பட்டங்கள் உள்ளிட்ட அரசின் எந்த கௌரவிப்புகளையும் ஏற்பதில்லை என்று முடிவெடுத்த இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகும். இந்த முடிவின் அடிப்படையில், என்.சங்கரய்யா கடந்த காலங்களில் எந்த விருதுகளையும் மறுத்தே வந்துள்ளார். அதே சமயம் தமிழ்நாடு அரசு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதினை ஏற்றுக் கொண்ட அவர், அரசு அளித்த விருது தொகையான ரூபாய் 10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

எனவே, அத்தகைய சிறப்பு வாய்ந்த என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதால் அந்த பட்டத்திற்கும், வழங்குகிற பல்கலைக்கழகத்திற்கும் தான் பெருமைக்கூடும். ஆனால், இந்துத்துவா அமைப்புகளும், அவற்றின் தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ்-ம் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த இயக்கங்கள் என்பது வரலாறு. பல சந்தர்ப்பங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒத்துழைப்பு நல்கி ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வந்துள்ளது. இதன் பிரதிநிதியாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என்.ரவி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்திருப்பது வியப்பளிக்கவில்லை.

விடுதலைப் போராட்ட காலத்தில் ஐந்து ஆண்டுகளும், பிறகு மக்களுக்கான போராட்டத்தில் 4 ஆண்டுகளும் என மொத்தம் ஒன்பது ஆண்டுகள் சிறை, இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என நீண்ட நெடிய தியாக வாழ்க்கையை கொண்ட என்.சங்கரய்யாவின் அருமை பெருமைகளை உணர்வதற்கான தகுதியே இல்லாதவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. விடுதலைக்குப் பிறகும் இந்தியாவின் மதச்சார்பற்ற மாண்புகளை பாதுகாப்பதற்கும், சுரண்டலற்ற ஒரு சோசலிச சமூகம் அமைவதற்கும் உயரிய லட்சிய பிடிப்போடு போராடி இன்றுவரை நமக்கு வழிகாட்டி வரும் என்.சங்கரய்யாவின் பெருமையை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் ரசிக்க முடியுமா?

அரசியல் அமைப்புச் சட்ட மாண்புகளை அழித்து, கார்ப்பரேட் மூலதன சக்திகளின் பிரதிநிதியாக ஆட்சி செலுத்தும் சங் பரிவார கூட்டத்திற்கு, அவரது வாழ்வின் மேன்மைகளும், சிறப்புகளும் எட்டிக்காயாகத்தானே கசந்திடும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், என்.சங்கரய்யாவின் மகத்தான தியாக வாழ்வை அங்கீகரிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நடவடிக்கை மூலம் ஆளுநர் பொறுப்பை மென்மேலும் சிறுமைப்படுத்தியே வருகிறார். ஆளுநரின் இந்த தரக்குறைவான நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது" என கண்டனங்களை பதிவு செய்தார்.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details