சென்னைவள்ளுவர் கோட்டத்தில், தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில், கடந்த மே மாதம் 28ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் 3 இளைஞர்கள் சாதிப்பாகுபாட்டால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் மற்றும் வன்கொடுமைத்தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக தர்மபுரி இளைஞர்களுக்கு நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என முழக்கங்களை முழக்கினர்.
இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "தர்மபுரி தாக்குதல் குறித்து இங்கு அனைவரும் கூடி இருக்கிறோம். இந்த சம்பவத்தை விபத்து என முடிவு செய்ய முடியாது. இதனைத் திட்டமிட்ட படுகொலை வழக்கு என தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி வழக்காக மாற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு பெரிய கடிதம் எழுதி உள்ளேன். நிச்சயம் அவரை இரண்டு நாட்களில் சந்திக்கும் பொழுது, அவரிடம் இதனை வலியுறுத்திப் பேசுவேன். பல ஆணவ கொலைகளைச் சமீப காலமாக பார்த்து கொண்டு வருகிறோம். ஆனால், கும்பகோணத்தில் நடைபெற்ற பட்டியலினத்தை சார்ந்த பெண்ணுக்கு நடைபெற்ற கொடுமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன் தங்கையையே, சகோதரர் வெட்டி கொலை செய்துவிட்டுக் காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளார். ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என பேசுகின்ற அதே சூழலில், சமூகத்தில் ஒரு பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வு தேவை. விபத்து என்று சொன்னால், கால் துண்டித்து 50 அடிக்கு அந்த பக்கம் போய் விழுந்து இருக்குமா?