காஞ்சிபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சில கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்ட கொடூரத்திற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, 'காஞ்சிபுரத்தில் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை ஏப்ரல் 3 அன்று சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை துடியலூரில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்காத நிலையில், காஞ்சிபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரமான சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இச்சம்பவத்தன்று மாலை 5 மணியளவில் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர். அப்போதே உடனடியாக காவல் துறை செயலில் இறங்கியிருந்தால் சிறுமியை மீட்டிருக்க முடியும். ஆனால், காவல்துறை காலம் கடத்தியதன் விளைவாக, அச்சிறுமி அன்றிரவு முழுவதும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் வீசப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, துடியலூரில் சிறுமி கொலை சம்பவம் போன்று அடுக்கடுக்கான சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் காவல்துறை துடிப்புடன் செயல்பட மறுத்துவருவது ஆழ்ந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது,