அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி ஆணை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் புதிய வரலாறு தமிழ்நாட்டிலும் தொடங்கியுள்ளதை வரவேற்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், " கேரளத்தில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான அரசாங்கம், முதல் முதலாக வெற்றிகரமாக இந்த முயற்சியை முன்னெடுத்தபோது மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கினார்கள்.
தமிழ்நாடு மக்களும் பிற்போக்கு சக்திகளின் குறுகிய எண்ணங்களைப் புறம் தள்ளி, மாபெரும் ஆதரவை வழங்குவார்கள். ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற பட்டியலின மாணவர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங்கியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இவ்வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் புதிய வரலாறு தமிழ்நாட்டிலும் தொடங்கியுள்ளது. பாராட்டி வரவேற்போம்.
இன்று பணி நியமன ஆணை பெற்ற அர்ச்சகர்களில், பட்டியல் பிரிவு 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 12 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர் ஒருவர். பெண் ஓதுவார் ஒருவர் என தெரியவந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:எம்மதமும் சம்மதம்- அருணகிரி நாதர் மாஸ் பேச்சு!