தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பாக முதல் மாநில மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்கு எதிரான வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 திரும்பப்பெற வேண்டும், பொதுச் சுகாதாரத் துறையைத் தனியார் மயமாக்குவதை எதிர்ப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மருத்துவ மாணவர்களின் மாநாட்டு மலரைப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.