சென்னை: தமிழ்நாட்டில் திட்டமிட்டே சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கிட பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கலகத்தை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்ற முடியாத நிலையில், கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் மிக மலிவான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாஜகவின் வன்முறை அரசியலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
பாஜக தங்களின் கொள்கை பலத்தால் அல்லது தங்களது மத்திய ஆட்சியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றியது என எதனையும் வெளிப்படுத்திட இயலாத நிலையில் கலகம் செய்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் அற்பத்தனமான செயலில் பாஜக ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க:"ஐ.டி ரெய்டை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளாது" - அமைச்சர் துரைமுருகன்!
பொது இடங்களில் கொடி ஏற்றுவது குறித்து உரிய அனுமதியை உரியவர்களிடத்தில் பெறாமல், வேண்டுமென்றே கொடி நடுவது, அதனைத் தடுக்க முயற்சிக்கும் காவல் துறையினரைத் தாக்குவது, தரம் தாழ்ந்த முறையில் நடந்து கொள்வது, இதன் மூலம் கலவரத்தை உருவாக்கி சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூக்குரல் எழுப்புவது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜகவின் வன்முறை செயல்பாடுகளைக் கண்டிக்க வேண்டிய அக்கட்சியின் அகில இந்தியத் தலைமை, நால்வர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து, விசாரணை செய்யத் தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றது. அக்குழு ஒரே நாளில் விசாரணை முடித்து தமிழ்நாடு அரசின் மீது பழி சுமத்தி பேட்டி கொடுத்ததுடன், தமிழ்நாடு அரசின் மீது புகார் தெரிவித்து ஆளுநரிடம் புகார் மனு கொடுத்துச் சென்றுள்ளனர். மேலும், இப்புகார் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுப்பார் என்று மிரட்டும் தொனியில் கூறுகின்றார்.
இவை யாவும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளைச் சிதைப்பதாகும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் திட்டமிட்டே சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கிட பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் சோதனைக்கு காரணம் என்ன? முழுத் தகவல்!