உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,
“பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இயக்குநர் மகேந்திரன் முள்ளும்மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே எனும் திரைப்படங்கள் மூலம் திரைஉலகில் பிரபலமானவர். எளிய மக்களின் வாழ்வியல் எதார்த்தங்களை திரைப்படமாக்கியதுடன், தமிழ் திரைஉலகினை சரியான திசை நோக்கி நகர்த்த முயற்சித்தவர்களில் ஒருவர்.
காதல், குடும்பம், நட்பு எனும் கதாபாத்திரங்களில் தமிழ் கலாச்சாரங்களை இழையோடசெய்தவர். சமீபகாலங்களில் நிமிர், தெறி, போன்ற திரைப்படங்களில் நடித்ததின் மூலம் சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்தவர். அவரது மறைவு தமிழ் திரைஉலகிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திரைஉலகினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.