தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘செக்குமாட்டு சுற்றுப் பாதை’ - ஆளுநர் உரை மீது முத்தரசன் காட்டம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரை செக்குமாட்டு சுற்றுப் பாதை போல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்லும் ஆளுநர் உரை -முத்தரசன் குற்றச்சாட்டு!
செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்லும் ஆளுநர் உரை -முத்தரசன் குற்றச்சாட்டு!

By

Published : Jan 6, 2020, 7:43 PM IST

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காலை 10 மணி அளவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். மேலும், தனது உரையைத் தொடர்ந்து பின்னர் அனைத்துத் துறைகளின் மீதான விவாதங்களைத் தொடரலாம் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஆளுநர் உரை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுநர், தனது உரையைத் தொடங்கும் முன்பு எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவித்த கருத்துகளை காது கொடுத்துக் கேட்க மறுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் கடன் அளவு உச்சம் தொட்டது, வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஆளுநர் கவலைப்படவில்லை.

மத்திய அரசின் நிதிப் பகிர்வு முறையால் தமிழ்நாடு சந்தித்து வரும் நிதிப் பேரிழப்பை ஆளுநர் உரை குறைத்து மதிப்பிடுகிறது. மாநில உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரத்த குரல் எங்கும் ஒலிக்கவில்லை. மக்களை மத அடையாளப்படுத்தி பிளவுபடுத்தும் மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சி துணை போவது ஏன் என்பதை ஆளுநர் உரை விளக்கவில்லை.

அதுமட்டுமின்றி நீட் விவகாரம், உள்ளாட்சி வார்டு வரையறை உள்ளிட்டவை குறித்தும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை செக்குமாட்டு உரை போன்று இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாராம்சங்கள்

ABOUT THE AUTHOR

...view details