இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 02.05.2020ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் கரோனா நோய் பெருந்தொற்று பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை, டாஸ்மாக் கடைகளை திறக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டது. இந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டு, நாளை (07.05.2020) டாஸ்மாக் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
கோவிட் 19 நோய் பெருந்தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கவும் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான நிதியை கேட்டுப் பெற இயலாத அரசு, அழுத்தம் கொடுத்து கேட்டால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாவோம் என அஞ்சி நடுங்கி, அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி ரூபாய் 250 கோடி சுமையை , 40 நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் தலையில் ஏற்றியுள்ளது.