சென்னை:சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனாலும் இதற்கு செவி கொடுக்காத மக்கள் தங்களது மாடுகளை சாலையில் சுற்றித் திரிய விடுகின்றனர். இதனை அதிகாரிகளும் அவ்வப்போது கண்டுகொள்ளாமல் விடுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற 80 வயது சுந்தரம் என்ற முதியவரை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகள் முட்டி தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இதே பாரத்தசாரதி கோயில் அருகே உள்ள மாதா தெருவில் கடந்த 4ஆம் தேதி இதே போன்று சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் சுமார் நான்கு பேரை முட்டி தூக்கி வீசியது. அப்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
அதன் பிறகு மீண்டும் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவது வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து புகார்கள் அளித்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.