சென்னை:தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்திவருகிறது.
மேலும், பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளை அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர். தடுப்பூசியை கண்டு தொடக்கத்தில் மக்கள் அச்சம் கொண்டனர். ஆனால் தற்போது, மிகுந்த ஆர்வத்துடன் செலுத்திக்கொள்கின்றனர்.
இதனிடையே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தடுப்பூசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கிவருகிறது.
கோரிக்கை
தடுப்பூசி சரிவர கிடைக்கவில்லை என்பதால் பலர் மருத்துவமனை நிர்வாகத்திடமும், காவல் துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனை போக்கும் பொருட்டு, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி, ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.