சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று ஒமைக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல நல அலுவலர், மண்டல மருத்துவ அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மைச் செயலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் நேற்று (டிசம்பர் 23) ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது.
20,000 பேருக்கு கரோனா பரிசோதனை
இந்தக் கூட்டத்தில் ஒமைக்ரான் வகைத் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில், தொற்று பாதித்த நபர்கள் - சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுள்ள நபர்களுக்குக் கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி மண்டல நல அலுவலர்கள், மண்டல மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நாள்தோறும் சுமார் 20 ஆயிரம் நபர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், சந்தைப் பகுதிகளில் வணிகர்கள், அங்கு பணிபுரியும் நபர்களுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது கோவிட் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.