சென்னை: திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களில் பிறந்த 13 குழந்தைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 2 நாட்களாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. விமான நிலையங்களில் பின்பற்றப்படும் இந்த நடைமுறைகள் இனிமேல் தொடர வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கடந்த ஒரு வாரமாக சீனாவில் 30,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவோம்.