சென்னை:சென்னை ஐஐடியில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடந்த 19ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 20ஆம் தேதி 2 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 21ஆம் தேதி 9 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இந்தநிலையில், ஐஐடியில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவில் 22ஆம் தேதி 21 பேருக்கும், 23ஆம் தேதி 22 பேருக்கும், 24ஆம் தேதி 5 பேருக்கும், 25ஆம் தேதி 20 பேருக்கும், 26ஆம் தேதி 32 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஐஐடி மாணவர்களுக்கு ஒமைக்ரான் BA2 வைரஸ்: இன்று (ஏப்ரல் 27) செய்யப்பட்ட பரிசோதனை முடிவில் மேலும் 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், அனைவரும் ஐஐடி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.