தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: நோட்டீஸ் அனுப்ப பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் மறு ஆய்விற்கு எடுத்தது தொடர்பாக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 9:03 PM IST

சென்னை:2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதேபோல 2001-2006ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் இன்று (அக்.12) விசாரணைக்கு வந்தன. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் கட்டாயம் வாதத்தை தொடங்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். மேலும், வழக்கின் ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு இன்னும் நீதிமன்றத்தின் நோட்டீஸ் வரவில்லை என கூறினார். இதனையடுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை அலுவலகம் மற்றும் திண்டுக்கல் இல்லங்களின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:ஆதரவற்றோர் இல்லங்களை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details