சென்னை:தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ், தனக்கு எதிரான தவறாக பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்காக ஆஜரானதற்காக அப்பாஸை கைது செய்து உள்ளதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அப்பாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் - முகம்மது அப்பாஸ்
என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
தேசிய புலனாய்வு முகமை தரப்பில், வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் என்.ஐ.ஏ. எச்சரிக்கையுடன் செயல்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் முக்கிய ஆடியோ ஆதாரங்கள் சிக்கி உள்ளதாகவும், தொலைபேசியை ஒட்டுக் கேட்டபோது கிடைத்த தகவலின் அடிப்ப்படையிலும் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 01) தீர்ப்பளித்த நீதிபதிகள், முகமது அப்பாஸ் மீது என்.ஐ.ஏ தொடர்ந்த பயங்கரவாத தடை சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேசமயம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.