சென்னை:கடந்த 2011 - 2016 வரை அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் ஆயிரத்து 28 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டு வந்த ஒப்பந்ததாரர், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் துறைமுகத்திற்கு வரியாக கட்டிய பணத்தின் உண்மையான ரசீதுகளை சமர்ப்பிக்காமல், போலியானவற்றை சமர்ப்பித்து பல மடங்கு பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாகவும், அந்த நிறுவனத்துடன் மின்சார வாரிய நிர்வாகத்தினரும் கூட்டு சதியில் ஈடுபட்டு ஊழல் செய்துள்ளதாக புகாரில் குற்றம் சாட்டியிருந்தது.
2011 முதல் 2016 வரை ஊழல் நடந்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை 2018ஆம் ஆண்டு சமர்ப்பித்த நிலையில், அந்த புகாரில் விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை சுமார் 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது உறுதியாவதாக முடிவெடுத்து, அப்போதைய தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் என மொத்தம் 10 பேர் மீது கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
தங்கள் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று (ஜூலை 25) நடைபெற்றது.