நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இந்த தொகையை தான் தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ரஜினிகாந்திற்கு உத்தரவிடக்கோரி முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பெயரை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர் தான் வழக்கு தொடர வேண்டுமே தவிர, நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறி மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் அவர் மறைந்துவிட்டதால், வழக்கைத்தொடர்ந்து நடத்த, அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.