தஞ்சாவூர்: தஞ்சை அருகே விடுதியில் தங்கிப் பயின்ற மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டை, ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 35 பேரை தேனாம்பேட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டோரில் மூவர் சிறுவர்கள் ஆவர். இதனையடுத்து சிறுவர்கள் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 32 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலி முகவரி, பெயர்
இதில் கைதுசெய்யப்பட்ட 12 பேர் போலி பெயர், முகவரியைக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 12 பேர் மீதும், மேலும் ஐந்து பிரிவுகளின்கீழ் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 பேரும் பிணை கோரி மனு தாக்கல்செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 17) எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.