சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஐஏஎஸ் அலுவலர் சகாயம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரி தொடர்பாக விசாரணை நடத்திய சகாயம் தனது அறிக்கையில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்செய்திருந்தார்.
இதையடுத்து, விசாரணை ஆணையர் பொறுப்பிலிருந்து சகாயம் விடுவிக்கப்பட்டார். அதேவேளையில், சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய அலுவலர் சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அலுவலர்களுக்கும் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:'குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது வருத்தமளிக்கிறது' - சகாயம் ஐஏஎஸ்