சென்னை: இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் முரளிதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஓய்வுபெற்ற, நோய்வாய்ப்பட்ட யானைகளை பராமரிப்பதற்காக 2019ல் துவங்கப்பட்ட பெரம்பலூர் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட யானைகளை கொன்று குவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அங்கு முழு நேர யானைகள் மருத்துவ நிபுணர்கள் இல்லை எனவும், முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது அங்குள்ள ஏழு யானைகளுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
யானைகள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவதால், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுஎம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாகன்கள் இல்லை எனவும், முழு நேர கால்நடை மருத்துவர்கள் இல்லை எனவும் மனுதாரர் வாதிட்டார். மேலும், இந்த மையத்தின் பொறுப்பாளராக இருந்த மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா, வேலூருக்கு மாற்றப்பட்டதை அடுத்து மையம் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மையத்தில் உள்ள யானைகளை முறையாக பராமரிக்க வேண்டியது அரசின் கடமை எனவும், தற்போது வேலூரில் உள்ள வனத்துறை அதிகாரி சுஜாதா, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்து அதன் நிலை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, இந்த விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், நாட்டில் உள்ள பிற யானைகள் மறுவாழ்வு மையத்தில் பின்பற்றப்படும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:பொள்ளாச்சியில் 10 அடி நீள மலைப்பாம்பு..