சென்னை:விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் இயங்கிவரும் மருதசஞ்ஜீவினி என்ற ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியான செயல்பாடுகளில் காவல் துறை தலையிடக் கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி சி.பி. கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
சட்ட விதிகளுக்குள்பட்டு சிகிச்சை அளித்துவருவதாகவும், ஆனால் சோதனை என்ற அடிப்படையிலும், புகார்கள் வருவதாகவும் கூறி அன்றாடச் செயல்பாடுகளில் காவல் துறை அடிக்கடி தலையிடுவதாக மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு உயர் நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதனடிப்படையில் ஆயுர்வேத சிகிச்சை, மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால், காவல் துறை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பதால் அதைத் தடுக்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
காவல் துறையின் நடவடிக்கைகளைத் தடுக்கும்வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்தது.