தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்ட வழக்கு: இந்துசமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

நீலகிரியில் குலதெய்வம் கோயிலுக்கு ஏழு வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Nov 24, 2021, 8:03 AM IST

சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்ட வழக்கு; இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு!
சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்ட வழக்கு; இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்தார்.

அதில், “நெடுக்காட்டு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோயில் உள்ளது. இங்கு பூஜை, விழாக்கள் உள்ளிட்டவற்றை அந்த இன மக்களே செய்துவந்தனர். இந்நிலையில் 1994ஆம் ஆண்டு கெத்தை அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.

பல நூற்றாண்டு சடங்கு - கல்விக்குச் சமமா?

தற்போது அந்தக் கோயிலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த ஏழு வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது. தங்களுக்கான உணவை அவர்களே சமைத்துச் சாப்பிடுவது, கோயில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வதால் கல்வி தடைபடுகிறது.

இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத் துறை அலுவலருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீலகிரி கல்வித் துறை அலுவலர் சார்பில் தாக்கல்செய்த பதில் மனுவில், "கெத்தை அம்மன் கோயிலுக்கு பல நூற்றாண்டுகளாக ஐந்து முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களைப் பூசாரியாக நியமித்துவருகின்றனர். பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் இந்தச் சடங்குகளை உடைக்க முடியாது. சிறுவனுக்குத் தொடர்ந்து கல்வி வழங்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கிற்கு இந்து சமய அறநிலையத் துறை பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணையானது இரண்டு வாரத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:Theni Flood: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் - உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details