சென்னை:பள்ளி மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவை வழங்குவது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பத்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துடன் சத்துணவு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “கடந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு, சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்படவில்லை.
இதனையடுத்து தினமும் அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவை வழங்குவது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூலை 7) விசாரணைக்கு வந்தது.