சென்னை: தேனாம்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மனைவி வேலைக்குச் சென்ற பின், 12 வயது மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதேபோல கடந்த 2017ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி மகனைக் கடைக்கு அனுப்பி விட்டு, மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தந்தை தலைமறைவாகி விட்டார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தை மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தவறான கேள்வியை தவிர்த்த மாணவருக்கு மதிப்பெண்..!