சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17ல் அரசாணை வெளியிட்டது.
மேலும், ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞரும், ஜெ.ஜெயலலிதா ஃபாலோயர்ஸ் கட்சியின் நிறுவன தலைவருமான P.A.ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது அந்த மனுவில், ஆணையம் அமைக்கப்பட்டு ரூ.6 கோடி செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.