சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ_வாக வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த மூன்று மாதங்களாக எதிர் மனுதாரர் தரப்பில் இன்னும் வாதங்களை முன்வைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அடுத்த விசாரணையின்போது வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பாக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறி, அவரது வேட்புமனு ஏற்றதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தொகுதி தேர்தல் அலுவலர், எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பல்வேறு தேர்தல் வழக்குகளில், எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள அந்தந்த தேர்தல் அலுவலர்களை எதிர் மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய மனுக்களுக்குப் பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். இதையும் படிங்க: திமுக ஆட்சிக்காலம் சிறுபான்மையினரின் ஏற்றத்திற்கான காலம் - மு.க.ஸ்டாலின்