சென்னை:நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை திரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.
இதையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: இன்று ஆஜராக முடியாது.. போலீசாருக்கு மன்சூர் அலிகான் கடிதம்!
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, எதற்காக மனுவை தாக்கல் செய்தீர்கள்? எதற்காக தற்போது திரும்ப பெறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
அப்போது, எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ப்பதற்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்துள்ளதால் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி அல்லி நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை எனவும் தெரிவித்தார். இந்நிலையில் மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு நாளை(நவ. 24) விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் - மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!