தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் - AIADMK GC

அதிமுக பொதுக்குழு கூட்டம் (ஜூலை 11) விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்து நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
அடுத்து நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 4, 2022, 4:08 PM IST

சென்னை:கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்து, அது தொடர்பான வழக்கை ஜூலை 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனித்தனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுக்குழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம். ஆனால் மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர, முடிவெடுக்கக் கூடாது” என உத்தரவிட்டது.

கூடுதல் மனுக்கள்: ஆனால் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களைத் தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், மீண்டும் சண்முகம், “இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். எனவே இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டும்” என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.

மேலும், “அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்பதால், அவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது. எனவே, ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்னும் கூடுதல் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

காரசார வாதங்கள்: இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (ஜூலை 4) விசாரணைக்கு வந்தது. அப்போது சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், “ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 வரைவு தீர்மானங்களை நிராகரித்து விட்டு தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமித்தும், அடுத்த பொதுக்குழுவை ஜூலை 11 ஆம் தேதி கூட்டுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றியது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்” என கூறினார்.

அடுத்ததாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நலனுக்கு எதிராக கட்சி விதிகளில் திருத்தம் வரலாம் என்ற எண்ணத்திலேயே, ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது” என வாதிட்டார்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “ஏற்கனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தற்காலிக அவைத்தலைவராக மட்டுமே தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். சிறப்பு தீர்மானத்தின் மூலம் அவரை நிரந்தர அவைத்தலைவராக நியமித்தது தவறு.

நீதிமன்றம் கேள்வி: அவரை நிரந்தர அவைத்தலைவராக நியமிக்க எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்ததும், அதை ஜெயக்குமார் வழி மொழிந்ததும் நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரிக்கை எழுப்ப முடியாது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு, ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு விட்டாலோ, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலோ இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்?

ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரை தலையிட முடியாது. ஜூன் 23 ஆம் தேதி நடந்த நிகழ்வுகளை சமர்ப்பிக்க உத்தவிடப்படுகிறது. மேலும் இவ்வழக்கின் விசாரணை ஜூலை 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:ஓபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பு என்னவாகும்? - வரும் ஆறாம் தேதி விசாரணை

ABOUT THE AUTHOR

...view details