சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரதச் சக்ரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது.
செந்தில் பாலாஜியை விடுதலை செய்யலாம் எனவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில், நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் உள்ளவரை சட்டவிரோதக் காவலில் இருப்பதாக கருத முடியாது என்பதால் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பில், நீதிபதி பரத சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அல்ல, ஆனால் அவர்கள் ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்படவில்லை, விசாரணைக்கு தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தான் நிரபராதி என நிரூபிக்க சட்டரீதியான உரிமை உண்டு. விசாரணையை நடக்கவிடாமல் செய்ய உரிமை இல்லை. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான். அவரை காவலில் எடுப்பது அவசியம். ஆனால், தான் குற்றம்செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை காவலில் இருந்த நாட்களாக கருத முடியாது. அவரது சிகிச்சைக்குப் பிறகு அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை செய்யலாம். கைதுக்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனக் கூற முடியாது.