சென்னை, செம்பியம் ரமணா நகர் ஜங்ஷனில் வசித்துவந்த வயதான தம்பதி குணசேகர்(65) மற்றும் செல்வி (58). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகின்றனர். குணசேகரன் காவலாளியாக பணிப்புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக அவர் வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், உணவில்லாமலும் குணசேகர் மற்றும் அவரது மனைவி தவித்து வந்துள்ளனர்.
குணசேகர் தனது மகன்களிடம் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால், 3 மகன்களும் பணம் கிடையாது என தெரிவித்ததால், மனமுடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் நேற்றும் மகன்களிடம் சென்று உதவி கேட்டுள்ளார் .ஆனால், அவர்கள் உதவி செய்ய மறுத்ததால், இதுதான் நீங்கள் என் முகத்தை கடைசியாக பார்ப்பது என அவர்களிடம் கூறிவிட்டு வந்துள்ளார். பின்னர் மனமுடைந்த குணசேகர் மற்றும் அவரது மனைவி செல்வி, நேற்று (ஜூலை 23) காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.