சென்னைஎழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், மசாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி ஆண்களை வரவைத்து அதிகளவு பணம் கேட்டு, மிரட்டுவதாக பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்று வந்துள்ளது. இது தொடர்பாக சந்தேகம் ஏற்பட்ட பாலியல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். விசாரணை செய்யும்போது கையும் களவுமாக ஜெயப்பிரதா என்ற கல்லூரி மாணவி சிக்கிக்கொண்டார்.
முதலில் விசாரணை செய்த போது காதலனை சந்திக்க வந்ததாகக் கூறி நாடகமாடிய ஜெயப்பிரதா பின்னர் காவல் துறையினரின் கிடுக்குப்பிடியில் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். குறிப்பாக அவரது செல்போன் மற்றும் G-Pay போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ஜெயப்பிரதா 12ஆம் வகுப்பு படிக்கும்பொழுது சமூக வலைதளம் மூலமாக பிரகாஷ் என்ற பாலியல் தரகரை காதலித்துள்ளார். இந்தப் பாலியல் தொழிலில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என காதலன் ஆசை வார்த்தை காட்டியதால், 12ஆம் வகுப்பு படித்த ஜெயப்பிரதா கல்லூரி மாணவிகளை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த சென்னையின் பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதற்குப் பணம் கட்டி, கல்லூரியில் படிக்க சீட்டும் வாங்கி கொடுத்துள்ளார், காதலன் பிரகாஷ்.
முதற்கட்டமாக சக மாணவிகளிடம் நட்பாகப் பழகி அவர்களது பணத்தேவையை வைத்து ஜெயப்பிரதா கடன் வழங்கியுள்ளார். அவ்வாறு வாங்கிய கடனை மாணவிகள் திரும்பச்செலுத்த முடியாத நிலையில், கடன் வாங்கிய பெண்ணிற்கு மேலும் அதிகமாக தொகை கொடுத்து, இதுபோன்று அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, பெரும்பாலான தொழிலதிபர்கள், பிரமுகர்கள் பெங்களூரு, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் பாலியல் ஆசைக்காக கல்லூரி மாணவிகளை தேடுவதாகவும், பாலியல் தொழிலில் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டால் வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் போதெல்லாம் பணம் கிடைக்கும் என்ற அடிப்படையில், பல பெண்களை நாசமாக்கியது தெரியவந்துள்ளது. தனியாக வந்து விடுதியில் தங்கிப்படிக்கும் பெண்களை வலையில் சிக்க வைத்து நாசமாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்காக சொகுசு வீடுகள், தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்தும், Oyo ரூம்களை வாடகை எடுத்தும் காவல் துறையினருக்குத் தெரியாமல் பாலியல் தொழில் நடத்தியுள்ளனர். கடந்த 3 வருடமாக பாலியல் தொழிலில் காதல் ஜோடி ஈடுபட்டும் காவல் துறையினரிடம் சிக்காமல் இருந்துள்ளனர்.
லோகாண்டோ இணையதளம் மற்றும் செயலி மூலம் விளம்பரப்படுத்தி காதலன் பிரகாஷ் மூலம் பொறியியல் மாணவி ஜெயப்பிரதா விமரிசையாக பாலியல் தொழிலை செய்ய ஆரம்பித்துள்ளார். இவ்வாறாக பாக்கெட் மணி, அதிக அளவு பணம், சுற்றுலா செல்வது, பெரிய மனிதர்களின் தொடர்பு எனப் பல்வேறு விதமாக ஆசையில் விழுந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பலரை பாலியல் தொழிலில் காதல் ஜோடி பிரகாஷ் - ஜெயப்பிரதா ஈடுபடுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இவர்கள் மூலம் பாலியல் தொழிலில் சிக்கிய பலரது தகவல்கள் ஜெயப்பிரதா செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்ததன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓலா, உஃபர் போன்ற தொழில் போல் நெட்வொர்க் அமைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஓலா, உபர் போன்ற நிறுவனங்களிடம் அட்டாச் செய்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வாகனம் ஓட்டி பணம் சம்பாதிப்பார்கள்.
அதற்கான கமிஷன் தொகையை ஓலா, உபர் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு வாகன ஓட்டுநர்கள் சம்பாதிப்பர். அதேபோன்று பாலியல் தொழிலில் ஈடுபடும் பல பெண்கள் குறிப்பாக மாணவிகள், பிரகாஷ் மற்றும் ஜெயப்பிரதா காதல் ஜோடிகளை பயன்படுத்தி கமிஷன் தொகை கொடுத்து பாலியல் தொழிலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
பாக்கெட் மணிக்காகவும் படிக்கும் காலத்தில் உல்லாசமாக இருக்கலாம் எனவும் வரும் மாணவிகளை பெரும் தொழிலதிபர்களுக்கு பாலியல் இச்சைக்கு ஈடுபடுத்தி, அதில் வரும் 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை G-Pay மூலம் வாங்கிக் கொண்டு, வெறும் 3000 ரூபாய் சொற்ப அளவு பணத்தை கொடுத்து பாலியல் தரகர் காதல் ஜோடி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் காதலி ஜெயப்பிரதா மற்றும் காதலன் பிரகாஷின் கூட்டாளி பிரேம் தாஸ் இருவரை மட்டும் பாலியல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முக்கியத் தரகரான காதலன் பிரகாஷை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கடன் வாங்கித் தருவதாக கேரள தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி - ஊராட்சி மன்றத் தலைவர் வீடுகளில் ரெய்டு!