சென்னை:சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வசித்துவருபவர்கள் செந்தில் (40) - திவ்யா (35) தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டிலேயே மாத ஏலச்சீட்டு, டேபிள் சீட்டு, ஸ்கூல் ஃபண்ட், மாத ஃபண்ட், தீபாவளி ஃபண்ட், கிறிஸ்துமஸ் ஃபண்ட் உள்ளிட்ட பெயர்களில் முறையாக அனுமதி பெறாமல் மாதாந்திர ஏலச் சீட்டும், ஃபண்ட்டும் நடத்திவந்துள்ளனர்.
இவர்கள் நடத்திவந்த ஏலச்சீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷன் (31), அவரது குடும்பத்தார் ஐந்து பேர் உள்ளிட்டோர் சேர்ந்து சீட்டு, ஃபண்ட் பணம் கட்டிவந்துள்ளனர். பின்னர் தாங்கள் கட்டிவந்த சீட்டு முதிர்வடைந்த பிறகும் திவ்யா, செந்தில் தம்பதியர் பணத்தைத் திரும்பத் தராமல் சீட்டுப் பணம் கட்டியவர்களிடம் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இது தொடர்பாக பிரியதர்ஷன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். குறிப்பாக திவ்யா, செந்தில் தம்பதி தங்கள் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.