உலகளாவிய பெருந்தொற்றான கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மே 3ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள், விடுதிகள், பார்கள், அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.
தடை காரணமாக, கடந்த 25ஆம் தேதியிலிருந்து மதுபிரியர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்கள் திருட்டு போகும் நிலை உருவானது. பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற தொடங்கியதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை பாதுகாப்பு காரணமாக இடமாற்றி வைக்க அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக மதுக்கடைகள் இயங்காத நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பலர் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யத்தொடங்கி உள்ளனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சங்கர் நகர் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், திருநீர்மலை பகுதி அருகில் உள்ள அடையாறு ஆற்றங்கரையோரம் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிய 3 பேரையும், வீட்டிலேயே சாராயம் காய்ச்சிய 2 பேரையும் காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
கள்ளச்சாராய விற்பனை : திருநீர்மலை முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு அவர்களை சிறையில் அடைத்த பின்னரும் அந்த பகுதியில் ரகசியமாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து கொண்டு வந்தது. இந்நிலையில், நேற்றும் அந்த பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் திடீர் சோதனைகள், காவல் சோதனைச் சாவடிகள், அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். மதுவிலக்கு காவல் அலுவலர் ஈஸ்வரன் தலைமையிலான காவல் குழுவினர் ஆளில்லா விமான (ட்ரோன்) கேமரா மூலம் திருநீர்மலை பகுதி முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :சட்ட விரோதமாக குட்கா கடத்திய நபர் கைது!