சென்னை:கள்ளச் சாராயம் விற்றதாகக் கூறி பெண்ணை அடித்து மானபங்கப்படுத்திய மூன்று காவலர்களுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த ஆலங்குளம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், தலைமைக் காவலர்கள் ஜான்சன், சசிகுமார் உள்ளிட்டோர், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் ஆலங்குளத்தில் உள்ள மாரியம்மாள் என்பவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறி சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.
அப்போது வீட்டில் இருந்த பொருட்களைத் தூக்கி வீசியதுடன், குழந்தைகளின் சிகிச்சைக்காக வைத்து இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, அவரை அடித்து இழுத்துச் சென்று மானபங்கம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
கை, கால் என உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்படுத்தியதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5 நாள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார். அதன்பின் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அவர் புகார் அளித்தார்.
இதில் விசாரணை நடத்திய ஆணையத்தின் உறுப்பினர் வி.கண்ணாதாசன், பாதிக்கப்பட்ட மாரியம்மாளுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார். பின்னர், அந்த தொகையை உதவி ஆய்வாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டு தலைமைக் காவலர்களிடம் இருந்தும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்துக் கொள்ள வேண்டுமெனவும், மூவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசிற்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு! வனத்திற்குள் சென்ற போது மின்வயர் உரசி பரிதாபம்!