சென்னை:நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாகவும் நடைபெறவுள்ள தேர்தலில் திமுக, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு பங்கீடு தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறுகையில், “புத்தாண்டுக்குப் பின்னர் முதல்வரைச் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட அளவில் ஆங்காங்கே திமுக மாவட்டச் செயலாளர்கள் உடன் கூட்டணிக் கட்சி சார்பில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது.
விசிக சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் கட்சிக்குத் தேவையான தொகுதிகளை திமுக மாவட்டச் செயலாளர்களுடன் சமர்ப்பித்து இரண்டு மூன்று நாள்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விசிகவிற்கு தலைவர் பதவிகள் ஒதுக்கக் கோரிக்கை
இது குறித்து முதலமைச்சர் இடத்தில் விசிகவிற்க்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி, பேரூராட்சி நகராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை விசிகவிற்கு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது.